

காணாமல் போன செல்லப் பிராணி ஆஸ்டரை போலீஸார் நேற்று இரவு மீட்டு அதன் உரிமையாளர் வேதிகாவிடம் ஒப்படைத்தனர். அவர் போலீஸாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேதிகா. இவர் ‘யான் உடான்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வேதிகா தனது வீட்டில் பீகிள் இனத்தைச் சேர்ந்த ஆஸ்டர் என்ற 10 வயது நாயைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த 25ஆம் தேதி ஆஸ்டர் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வேதிகா தனது நாயைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது நாய் காணாமல் போன அறிவிப்பைத் துண்டுப் பிரசுர வடிவில் அச்சிட்டு விநியோகம் செய்த அவர், சமூக வலைதளங்களிலும் இதுபற்றி அறிவிப்பு செய்தார். மேலும் இதுகுறித்துக் காவல் துறையிலும் புகாரளித்திருந்தார். தனது நாயைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.8,000 வெகுமதியும் உண்டு என்று அறிவித்தார்
நாய் காணாமல் போன அன்று வேதிகாவும், அவரது 4 நண்பர்களும் நுங்கம்பாக்கம் முழுக்க 13 மணி நேரம் தொடர்ந்து தேடியுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 15க்கும் மேற்பட்டவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வடபழனி, கோயம்பேடு எனப் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வேதிகாவின் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதில் நாயைத் திருடிச் சென்றவரின் முகம் பதிவாகியிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று (01.03.21) வேதிகாவின் செல்ல நாய் ஆஸ்டரை போலீஸார் கண்டுபிடித்தனர். நாயை வைத்திருந்தவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது நாய் தனியாக சாலையில் நின்று கொண்டிருந்ததாகவும், அதனால் இரக்கப்பட்டு தான் அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். நாய் ஆஸ்டர் மீண்டும் வேதிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து செல்லப் பிராணியின் உரிமையாளர் வேதிகா கூறும்போது, ''நாயைத் தேட உதவிய நண்பர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், மேலும் நாய் தானே என்று அலட்சியப்படுத்தாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு உடனடியாக தனது நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினருக்கும் நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.