Published : 02 Mar 2021 09:56 AM
Last Updated : 02 Mar 2021 09:56 AM

வங்கி மூலம் பணப் பட்டுவாடா, வங்கிக் கணக்குகளைக் கண்காணிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்துக் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து திமுக தரப்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“2021 தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி.அருண், ஆர்.நீலகண்டன், ஜெ.பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் தலைமை தேர்தல் அலுவலரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

* அதிமுகவினர் சார்பில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதனைக் கையும் களவுமாகப் பிடித்து திமுகவினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

வருவாய்த் துறை அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டு புகார் கொடுக்க மறுக்கின்றனர். ஆகவே திமுகவினர் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* பறக்கும் படையினர், அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய எடுத்துச்செல்லும் பணத்தைப் பிடிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

* தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் ஆளும் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தேர்தல் அறிவித்த நாள் அன்றும், அதற்குப் பிறகும் அறிவிக்கப்பட்ட மாறுதல் உத்தரவுகளை நியமன உத்தரவுகளை நிறுத்திவைத்து உத்தரவிட வேண்டும்.

* வாக்காளர்களுக்கு இலவசப் பரிசுப் பொருட்கள் வழங்கும் வகையில் அதிமுகவினர் நடத்தி வரும் நிகழ்ச்சிகளை முழுவதும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து வங்கிகளின் பணப் பரிமாற்றத்தை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்காக, ஆளும் கட்சியினரால் வங்கிக் கணக்கு புத்தக நகல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறதா என்பதை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும்.

* பதற்றமான வாக்குச்சாவடிகளில் மற்றும் தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதலான மத்திய பாதுகாப்புப் படை போடப்பட வேண்டும்.

* வாக்குப் பதிவு முழுவதும் இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும்.

* மாவட்டத் தலைநகரங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்ற முடிவினை மாற்றி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும்.

* வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் முழுமையாகப் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.

இவ்வாறு திமுக கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x