Published : 28 Nov 2015 12:08 PM
Last Updated : 28 Nov 2015 12:08 PM

இளங்கோவனை பதவி நீக்கம் செய்க: சோனியாவுக்கு விஜயதாரணி கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அக்கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வந்த எம்.எல்.ஏ.விஜயதாரணி மாநிலத் தலைவர் இளங்கோவனை சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தான் வைத்த பேனரை சிலர் அகற்றிவிட்டதாக இளங்கோவனிடம் புகார் கூறினார். மேலும், அந்த பேனர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தன்னை இழிவுபடுத்தும் இந்த செயலலில் ஈடுபட்டவர்கள் மீது கட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆனால், அதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயதாரணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது இளங்கோவன் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பெண் என்றுகூட பாராமல் தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். அவரது கோபத்தால் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படக்கூடும் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக் கோரி ப.சிதம்பரம், குமரி அனந்தன், வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை சந்தித்தனர்.

இந்நிலையில், மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியும் இளங்கோவனை நீக்கக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக விசாரிக்க இளங்கோவனை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x