

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டின் பயன்களை மக்களுக்கு எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நமது தொடர் போராட்டத்தைதொடர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதஇட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடுவழங்க தமிழக அரசு முன்வந்தது.கடந்த 26-ம் தேதி வன்னியர் இடஒதுக்கீடு சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் இரண்டரை கோடி வன்னியர்களின் உள்ளங்கள் குளிர்ந்தன. அனைவரும் மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கினர். கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வன்னியர் வாழ்வில் இனி வசந்தம் வீசும். இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாம் போராடி வென்றெடுத்துள்ள இட ஒதுக்கீட்டின் பயன்களை நமது மக்களுக்கு எடுத்துக் கூறுவதுதான்.
இட ஒதுக்கீட்டுக்காக போராட வருமாறு அழைத்ததுபோல, இப்போதும் வீடு வீடாகச் சென்று 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். முதல்கட்டமாக வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்துவிட்டு, அடுத்தகட்டமாக துண்டறிக்கை வழங்க வேண்டும்.