Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

நேர்காணலுக்கு நிர்வாகிகளை அலைக்கழிக்கும் அதிமுக, திமுக

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகசார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்று முன்தினம் வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதிமுகவும் மார்ச் 3-ம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெறுகிறது.

அதிமுகவை போல் இந்த முறைதிமுகவும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதனால்,ஒவ்வொரு தொகுதிகளிலும் நிர்வாகிகள் வழக்கத்துக்கு மாறாகஅதிகளவு போட்டியிட விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன? கூட்டணியில் தங்கள் கட்சிக்கு எந்த தொகுதிஒதுக்கப்படும்? என்பதும் தெரியாத நிலையிலே இந்த இரு பெரிய கட்சிகளிலும் நிர்வாகிகள் அனைத்துத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட மனு அளித்தோருக்கான நேர்காணல் இன்று (மார்ச் 2) முதல் நடைபெறுகிறது. அதிமுகவில் நேர்காணல் விரைவில் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:

தற்போதுதான் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமாக செலவு செய்து சென்னைக்கு வந்து விண்ணப்ப மனு செய்துவிட்டு வந்துள்ளனர். கூட்டணியில் தங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்பதுதெரியாமலே தங்களது ஆதரவாளர்களுடன் செலவு செய்து கொண்டு நேர்காணலுக்காக சென்னைக்கு வர வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டுமென்றால் நிர்வாகிகள் தங்கள் செல்வாக்கை காட்ட ஆதரவாளர்களை சென்னைக்கு கார்களில் அழைத்துச் செல்லவேண்டும், அவர்களுக்கு தங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்ட பல்வேறுவசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

நிர்வாகிகளுக்கு அலைச்சல்

தேர்தலில் ஏராளமான செலவுகளைச் செய்ய வேண்டியநிலையில் மற்ற செலவுகளை நிர்வாகிகளுக்குக் குறைக்க இந்த இரு பெரிய கட்சிகளும் குறைந்தபட்சம் நேர்காணலையாவது திருச்சி அல்லது மதுரையில் பிரித்து நடத்த முன் வர வேண்டும். அதன் மூலம் நிர்வாகிகளுக்கு அலைச்சலும், செலவும் மிச்சமாகும்.

இரு கட்சிகளிலும் விருப்ப மனு பெறுவது, வேட்பாளர் நேர்காணல் நடத்துவது சம்பிரதாயத்துக்குத்தான் என்பது அக்கட்சி நிர்வாகிகளுக்கு நன்றாகவே தெரியும். வேட்பாளர்களை தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவு செய்துவிட்டுதான் தேர்தலைச் சந்திக்க அக்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதனால், குறைந்தபட்சம் திமுக, அதிமுகவில் நேர்காணலை, தென் மாவட்டங்களுக்கு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x