

சேலம் அருகே இரவு நேரத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டதாக பரவிய வாட்ஸ்அப் வீடியோவைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் உடையாப்பட்டி கூட்டுறவு வங்கி இரவு நேரத்தில் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், வங்கியின் உள்ளே பொதுமக்கள் சிலரும், ஊழியர்களும் இருந்த வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப்பில் வைரலானது.
மேலும், அந்த வீடியோ பதிவில்,வங்கியின் உள்ளே செல்லும் நபர், எதற்காக வங்கியை இரவு நேரத்தில் திறந்து வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்புவதும், அதற்குஊழியர்கள் யாரும் பதிலளிக்காமல் மவுனமாக இருப்பதும் பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து, கூட்டுறவுவங்கியில் இரவு நேரத்தில் கதவைமூடி சில கட்சியினருக்கு நகைக்கடன் வழங்கப்படுவதாகவும், தமிழக அரசு பயிர்க் கடன், நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், முன்தேதியிட்டு இரவு நேரத்தில் நகைக் கடன் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் 2 கூட்டுறவு சங்கபதிவாளர்கள் தலைமையில் சர்ச்சைக்குரிய தொடக்க வேளாண்கூட்டுறவு வங்கியின் ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கைதர உத்தரவிடப்பட்டுள்ளது.
வலசையூரில் புகார்
இதனிடையே, சேலம் வீராணம் அடுத்த வலசையூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 25-ம் தேதி ஒரே நாளில் ரூ.35 லட்சம் கடன் வழங்கப்பட்டதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கூட்டுறவு வங்கியில் திரண்டனர்.
தகவல் அறிந்த வீராணம் போலீஸார், கூட்டுறவு வங்கியில் திரண்டபொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். மேலும், இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “பொங்கலுக்குப் பின்னர் தொடக்க வேளாண்கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் கேட்டபோது கடன் வழங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி வங்கியில் ஒரே நாளில்ரூ.35 லட்சம் வரை நகைக்கடன் கொடுத்துள்ளனர். அரசின் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை, தங்களுக்கு வேண்டிய நபர்கள் பெறுவதற்காக, 25-ம் தேதி நகைக்கடன் கொடுத்துள்ளனர். இதற்குஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.