

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக திருப்பூ ரில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் செயல்படுவதாக, பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்தி கேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசியதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. கடந்த 26-ம்தேதி மாலை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், தாராபுரம் சாலை உஷா திரையரங்கம் அருகே ஆளுங் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பெரிய பதாகை அகற்றப்படாமல் உள்ளது. நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாகுபாடு காட்டுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் அளித்தால், பறக்கும்படையினர் உடனடியாக வர வேண்டும். ஆனால், கடந்த தேர்தல்களில் அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் வேறு பகுதியில் பணியாற்றுவதாக கூறுகிறார்கள். இதுபோன்ற குளறுபடிகளை தற்போதைய தேர்தலில் களைய வேண்டும்.
அதேபோல, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்புகொண்டால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக போதிய பயிற்சி அளிக்க வேண்டும். நடத்தை விதிமுறைகள் தொடர்பாக, அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாகுபாடின்றி பணிபுரிய வேண்டும். அலைபேசி செயலி மற்றும் புகார்கள் அளிக்க எளிய முறையை பயன்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்கு வெளியே பூத் கமிட்டி அமைக்கப்படும் இடத்தில், 200 மீட்டர் தூரத்தில் 4 பேர் அமருவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்.
அலுவலர்கள் பேசும்போது, "நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் கட்சிக் கொடிகள், கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அகற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலுள்ள தனியார் சுவர்களில், சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி அளித்தால்கூட சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதியில்லை. அரசியல் கட்சிகள் அனைவருக்கும் ஒரே விதிதான். ஆகவே, அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும்" என்றனர்.