Published : 14 Nov 2015 05:11 PM
Last Updated : 14 Nov 2015 05:11 PM

விருதுநகர் மாவட்டத்தில் 6 குழந்தை தொழிலாளர் உட்பட 34 சிறுவர்கள் மீட்பு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 6 குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட 34 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகளில் கடந்த 2 நாள்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் மின்னல்கொடி, சமூக நலத் துறை அலுவலர்கள், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இதில், 6-ம் வகுப்பு வரை படித்து பாதியில் படிப்பை நிறுத்திய திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டன்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது 12 வயது மகன் திருவில்லிபுத்தூரில் பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான பூக்கடையில் வேலை பார்த்தபோது மீட்கப்பட்டார்.

திருவில்லிபுத்தூரில் சேகர் என்பவரது இலை கடையில் பணியாற்றிய ஆராய்ச்சிபட்டியைச் சேர்ந்த முத்தரசன் என்பவரது 13 வயது மகன், சிவகாசியில் கடல் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய சிவகாசி செந்தில்குமார் என்பவரது 13 வயது மகன் மீட்கப்பட்டனர்.

மேலும், விருதுநகர் மார்க்கெட் பகுதியில் வேலை பார்த்த 2 குழந்தைத் தொழிலாளர்களும், மோட்டார் மெக்கானிக் கடையில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளி ஒருவரும் மீட்கப் பட்டனர்.

இத்துடன் ஆதரவின்றி திரிந்த 27 குழந்தைகளும் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினரால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x