சென்னையில் இரவு நேரத்தில் பேருந்து சேவை அதிகரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னையில் இரவு நேரத்தில் பேருந்து சேவை அதிகரிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 8 மணிக்கு பிறகு போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல், அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் பகல் நேரங்களில் தேவையின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இரவு 8 மணிக்கே பெரும்பாலான மாநகர பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், வேலை முடிந்து செல்லும்போது கடுமையாக அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பேருந்துகளை நம்பியே அதிக அளவில் மக்கள் இருக்கின்றனர். தினமும் இதை நம்பிதான் பணிக்கு சென்று வருகின்றனர். சாதாரணமாகவே பணிகளை முடித்து விட்டு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. ஆனால், போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காமல் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பேருந்துகள் இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் அதிக பணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, இரவு நேரத்தில் மாநகர பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். இரவு 10 மணி வரையிலாவது அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ பயணிகளின் புகாரின் அடிப்படையில் இரவு நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் பேருந்து இயக்கம் குறைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in