Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

தன்னை முன்னிலைப்படுத்த முனைகிறார்; மகனுடன் சென்று ராகுலை சந்தித்த முன்னாள் அமைச்சர்: புதுச்சேரி காங்கிரஸார் ஆதங்கம்

ராகுல்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்துவிட்டு குற்றாலத்தில் தங்கியிருந்தார். அங்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி தனது மகனான இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் விக்னேஷுடன் சென்று நேற்று காலை ராகுலை சந்தித்தார்.

இதுதொடர்பாக கந்தசாமியிடம் கேட்டதற்கு, “மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் அழைப்பின்பேரில் சென்றேன். புதுச்சேரியின் அரசியல் நிலவரம் குறித்தும், காங்கிரஸ் கட்சியினரை பாஜக இழுப்பது குறித்தும் ராகுலிடம் தெரிவித்தேன். திமுகவுடன் கூட்டணி தொடர்வது வரும் தேர்தலில் அவசியம் என்றும் குறிப்பிட்டேன்.

அப்போது ராகுல்காந்தி, `ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் புதுச்சேரியில் ஆட்சியை கொண்டு வர வேண்டும்' என குறிப்பிட்டார்” எனத் தெரிவித்தார். இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் முக்கிய அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பாஜகவில் இணைந்துவிட்டார்.

அதனால்இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள கந்தசாமி தொடர்ந்து கட்சித் தலைமையை சந்தித்து தன்னை நிலைநிறுத்த பார்க்கிறார். புதுச்சேரி காங்கிரஸில் தன்னை முன்னிலைப்படுத்தவே தனியாக சட்டப்பேரவையில் போராட்டம், விதிகளை தாண்டிதனது மகனுக்கு இளைஞர் காங்கிரஸில் செயல் தலைவர் பதவி என அடுத்தடுத்த பணிகளில் கந்தசாமி ஈடுபடுகிறார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயத்தின் ஆதரவாளர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததால், செயல் தலைவர்களாக அமைச்சர் கந்தசாமியின் மகனும், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலராகவும் இருந்த விக்னேஷ், துணைத் தலைவராக இருந்த வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தகுதியானவர்களை விட்டுவிட்டு விதி மீறி அமைச்சர் மகனுக்கு பதவி அளிக்கப்பட்டது தொடர்பாக புகார்கள் அனுப்பப்பட்டிருந்தன. மேலிடம் கண்டு கொள்ளவில்லை. மகனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதத்தில் ராகுலை சந்தித்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x