Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

முக்கியப் பிரமுகர்களை வாரி அள்ளும் பாஜக: புதுவையில் திக்கித் திணறும் காங்கிரஸ், என்.ஆர்.காங்., திமுக

புதுச்சேரி காங்கிரஸில் இருந்து முதலில் நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் விலகிய போது, “போனால்போகட்டும்; இனி ஒருவர் கூட விலக மாட்டார்கள்” என்றார் நாராயணசாமி. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, ஆட்சியே கவிழ்ந்தது.

வெளியேறியவர்களில் ஏறக் குறைய அனைவரும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டனர்.

கட்சியில் சேர்ந்து சொற்ப காலங்களில் சபாநாயகர் பதவி கொடுத்து அழகுப் பார்த்த சிவக்கொழுந்து கூட காங்கிரஸூக்கு ‘கை’ காட்ட,அவரது குடும்பத்தினர்பாஜகவில் ஐக்கியமாகியிருக் கின்றனர்.

சத்தமின்றி பல விஐபிக் களைகட்சியில் இணைத்த நமச் சிவாயத்தை இரு தினங்களுக்கு முன் காரைக்காலுக்கு வந்த மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா ’சபாஷ், குட்ஜாப்’ என்று பாராட்டி யிருக்கிறார்.

இந்த ஆட் சேர்ப்பின் அடுத்தக் கட்டமாக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரமும் பாஜகவில் இணைந்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தி யிருக்கிறது.

இவர் கடந்த 2011-ல் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கல்வியமைச்சராக இருந்தார். ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வழக்கில் சிக்கியவர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் ரங்கசாமியுடன் சமாதானம் ஏற்பட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமியும், கல்யாணசுந்தரமும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். தற்போது காலாப்பட்டில் போட்டியிட என்ஆர் காங்கிரஸில் வாய்ப்பு தரப்படும் என்று தெரிவிந்திருந்தனர். ஆனால், தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்நிறுத்துவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பலமுறை சந்தித்து பேசியும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

30 எம்எல்ஏக்கள் கொண்ட புதுவையில் 18க்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட வேண்டும் என என்ஆர்.காங்கிரஸ் கருதுகிறது. மீதமுள்ள 12 தொகுதிகளை அதிமுக, பாஜக பிரித்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதனால் இக்கூட்டணியில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

அமித்ஷா காரைக்கால், விழுப்புரம் வருகைக்குள் கூட்டணி தொகுதிகளை முடிவு செய்ய எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

என்.ஆர்.காங்கிரஸூடன் உடன்பாடு எட்டாத நிலையில் காங்கிரஸ், திமுகவில் இருந்து முக்கியப் பிரமுகர்களை தங்கள் வசம் இழுத்த பாஜக தற்போது என்.ஆர்.காங்கிரஸிலும் கை வைத்திருக்கிறது. மேலும் சிலர் ரங்கசாமி கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவ உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

ரங்கசாமி ஆன்மிக சுற்றுப் பயணம்: நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார்

கடும் சிக்கலுக்கு மத்தியில், ஆன்மிகத்தில் அதீத நாட்டம் கொண்ட என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கோயில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றார். சாமி தரிசனத்துக்கு பின்னர், அங்கிருந்து பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் ஜீவ சமாதிக்கும், அங்கிருந்து பழனி முருகன் கோயில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிகளில் ஒரு சேர ‘விசிட்’ அடிக்கிறார்.

தரிசனத்தை முடித்து விட்டு இன்று (மார்ச் 2) இரவு புதுவை திரும்புகிறார். கூட்டணி குறித்து முக்கிய முடிவை ரங்கசாமி நாளை அறிவிக்க உள்ளார். நடக்கும் சூழலைக் கண்டு ஆண்ட காங்கிரஸ் ‘கை’ பிசைந்து நிற்கிறது. காங்கிரஸூடன் பிணக்கில் உள்ள புதுச்சேரி திமுக தனி ஆவர்த்தனத்தை தொடங்க முயன்றது. தற்போது அதுவும் பாஜகவின் தடாலடியை கண்டு திகைத்து நிற்கிறது. என்.ஆர்.காங்கிரஸின் அடுத்தடுத்த நகர்வைத் தீர் மானித்து, புதுவையின் அரசியல் போக்கு இருக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x