

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக வேளாண்துறையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தமாணவி ஒருவர் பிஎஸ்சி (தோட்டக்கலை) படித்து வருகிறார். அந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பள்ளிவிடை பகுதியைச் சேர்ந்த பிரஸ்சிஸ் சேவியர் (30) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென அந்த மாணவியின் கழுத்தில் கத்தியால் வெட்டி, பிளேடால் கீறியுள்ளார். பின்னர் தனது கையையும் பிளேடால் கீறிக் கொண்டார்.
போலீஸார் இருவரையும் மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரஸ்சிஸ் சேவியர் ஒரு தலையாக மாணவியை விரும்பியதாக கூறப்படுகிறது. நேற்று மாணவியை பார்க்க வந்துள்ளார். அப்போது மாணவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்து இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.