

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 95 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் பீப்பாய்களின் விலை நிலவரப்படி ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த விலைப்படி தான் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் போடப்படுகிறது.
ஆனாலும், கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 95.08 ஆக உயர்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 94.94 ஆக இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 94.36 ஆக இருந்தது.
சென்னையை விட கடலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 2 அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி பெட்ரோல் விலை உயர்ந்தால் சமானியனால் எப்படி சமாளிக்க முடியும் என்று இருசக்கர வான ஓட்டிகள் பலர் தெரிவித்தனர். விரைவில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100 ஆக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு சென்னை, திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெட்ரோல் கொண்டு வரப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுவதால் இந்த விலை உயர்வுஎன்று தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 93.10 ஆக உள்ளது. புதுச்சேரியில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ. 92.55 ஆக இருந்தது. டீசல் ரூ.86.08க்கு விற்கப்பட்டது. புதுச்சேரியில் வாட் வரி 2 சதம் குறைக்கப்பட்டதால் விலையில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.