Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

அடகு நகைகளை மொத்தமாக மீட்க அனுமதிக்கக் கூடாது: அடகுக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், அச்சகம், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அடகுக்கடை உரிமையாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கொண்டு வந்தால், அதை அடகுக் கடை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

அதேபோல, அடகு வைக்கப் பட்டுள்ள நகைகளை மொத்தமாக மீட்க யாரும் பணம் செலுத் தினாலும், அதை நிராகரிக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை உரிய அனுமதி பெற்றுதான் ஒளிபரப்ப வேண்டும். இதேபோல, வேட்பாளர்கள் அச்சிடும் துண்டறிக்கை, போஸ்டர்களில் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களில் நடை பெறும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு முன் கூட்டியே அனுமதிபெற வேண்டும்.

மேலும் தேர்தல் விவரங்கள் குறித்து 04322 221627 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இக்கூட்டத்தில், எஸ்.பி எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x