

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ‘பன்னாட்டு சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக' மாற்றப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த அமைப்புகள், ஷிப்பிங் துறை சார்ந்த அமைப்புகள் மற்றும்தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகளை உள்ளடக்கிய ‘தூத்துக்குடி பன்னாட்டுசரக்கு பெட்டக பரிமாற்று மையத்துக்கான கூட்டமைப்பின் கவுரவ செயலாளர் ஜே.பி.ஜோ வில்லவராயர், துணைத் தலைவர்எட்வின் சாமுவேல், நிர்வாக செயலாளர் ஜெயந்த் தாமஸ் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பன்னாட்டு சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக (Transshipment Hub Port) மாற்ற வேண்டும் என்பது எங்களின் 20 ஆண்டுகால கோரிக்கை. இந்த திட்டம் தொடர்பாகஇரண்டு முறை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி கோவையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி வஉசி துறைமுகம் ‘பன்னாட்டு சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக' மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்கள் சிறிய கப்பல்கள் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிக செலவு மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது.
பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் ‘பன்னாட்டு சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக' மாற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மட்டுமன்றி தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும். புதிய தொழிற்சாலைகள் அதிகம் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு செலவு மற்றும் நேரம் மிச்சமாகும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. பன்னாட்டு சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும் போது 10 லட்சம் முதல் 15 லட்சம் சரக்கு பெட்டகங்களாக உயரும். வடமாநிலங்களில் இருந்து கூட சரக்கு பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும். எனவே, இந்த திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக்லால் மாண்டவியா ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.