Published : 16 Nov 2015 05:02 PM
Last Updated : 16 Nov 2015 05:02 PM

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு கருணாநிதி கடிதம்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசை வரலாறு மன்னிக்காது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து கடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றார். இதனை நம்பி 73 சதவீத தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். இதனால் 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று சிறீசேனா அதிபரானார்.

ஆனால், இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இதனை கண்டித்து சிறையில் உள்ள தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இது தொடர்பாக கடந்த அக்டோபரில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தனும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் சீறீசேனாவிடம் பேச்சு நடத்தினர். நவம்பர் 7-ம் தேதி அனைவரையும் விடுதலை செய்வதாகவும், உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர்களிடம் சிறீசேனா உறுதி அளித்தார்.

ஆனால், நவம்பர் 9-ம் தேதி 31 தமிழர்களை மட்டும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். இதனை ஏற்காமல் அவர்களும் சிறையிலேயே உள்ளனர். 200-க்கும் அதிகமான தமிழர்கள் சிறைகளில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் விக்னேஸ்வரன் கடந்த 12-ம் தேதி சிறீசேனாவை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடியவில்ல என அதிபர் விளக்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை தொடங்கியுள்ளனர். கடந்த 13-ம் தேதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஜனநாயக வழியில் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். ஆனாலும் இலங்கை அரசு அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.

இப்போதாவது இந்திய அரசு சிறையில் உள்ள தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அரசை வரலாறு மறக்காது, மன்னிக்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x