

திருவண்ணாமலையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.96 லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியின் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி ஷோபனா தலைமையில், திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். மேலும், காரில் இருந்தவர் வைத்திருந்த பையை சோதனை யிட்டபோது, அதில் ரூ.1,96,200 இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை விசாரித்தபோது, திருவண் ணாமலை பெருமாள் நகரில் வசிக்கும் தனியார் காஸ் ஏஜென்ஸி உரிமையாளர் கார்த்திகேயன் என்பதும், அவர் கொண்டு சென்ற பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி ஷோபனா, திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வெற்றி வேலுவிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை, சார் கருவூல அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான வெங்கடேசன் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.