எம்ஜிஆர் சிலை சேதம்: அதிமுகவினர் சாலை மறியல்

தீயில் கருகி சேதமடைந்த எம்ஜிஆர் உருவச்சிலை.
தீயில் கருகி சேதமடைந்த எம்ஜிஆர் உருவச்சிலை.
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே எம்ஜிஆர் சிலை மீது பட்டாசு தீப்பொறி விழுந்ததால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இதைக்கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவச்சிலைகள் அனைத்தும் துணியால் மூட மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்த தலைவர்களின் உருவச்சிலைகள் துணியால் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொ்ட்டி திமுகவினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

அப்போது, பட்டாசு தீப்பொறி ஒன்று அருகேயிருந்த எம்ஜிஆர் உருவச்சிலை மீது போர்த்தப்பட்டிருந்த துணியில் பட்டது. இதில், துணி எரிந்து, எம்ஜிஆர் சிலை சேதமடைந்தது.

உடனே, பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த வியாபாரி கள் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி தீயை அனைத்தனர். அதற்குள்ளாக எம்ஜிஆர் சிலை தீயில் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும், கந்திலி மேற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையிலான அக்கட்சியினர் அங்கு திரண்டனர்.

காவல் துறையினர் பேச்சுவார்த்தை

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய திமுகவினரை கைது செய்ய வேண்டும். சிலையை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் - பர்கூர் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் கந்திலி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.

இதைனையேற்ற அதிமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு சேதமடைந்த எம்ஜிஆர் சிலையை காவல் துறையினர் மீண்டும் துணியால் மூடினர்.

இச்சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in