

தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தன்மையுடன் செயல்பட்டால் தான் அரசியல்கட்சி இயக்கமாக வளர முடியும், என தமாகா மாநில பொதுச்செயலர் விடியல் சேகர் தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
மாநிலக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி பாஜக வளரும் நிலையில், உங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா ?
ஜிகே.வாசன் தலைமையில் தனித் தன்மையுடன் செயல்படுகிறோம். அதிமுக -பாஜக மெகா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். பாஜகவில் ஆக்கிரமிப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை.
தமிழகத்தில் இத்தேர்தலில் எத்தனை தொகுதிகள் எதிர்பார்க்கிறீர்கள் ?
குறைந்தபட்சம் 15 தொகுதிகள் வேண்டும் என தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புகிறோம். ஜி.கே.வாசனிடம் வலியுறுத்தி உள்ளோம். பரவலாகப் பெரும்பாலான இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தனித்தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே அரசியல் இயக்கமாக வளர முடியும் முன்னாள் எம்எல்ஏக்கள் 30 பேரும், 10 எம்பிகளும் ஜி.கே.வாசனை ஏற்றுச் செயல்படுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி பலவீனம் அடையும் சூழலில், தமாகா எப்படி பலம் பெறும்?
தமிழக காங்கிரஸ் பல்வேறு கோஷ்டி கூடாரமாக உள்ளது. ஒற்றைத் தலைமை அங்கீகரிக்கவில்லை. பலம் பொருந்திய ஒற்றைத் தலைமையை அகில இந்திய தலைமை ஏற்காது. இது போன்ற சூழலில் நாங்களே வெளியேறினோம்.
காங்கிரஸில் இருந்து பிரிந்த மம்தா, ஜெகன்மோகன் கட்சிகள் தவிர, பிரிந்த சிலர் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகின்றனர். தமாகாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் ?
காங்கிரஸ் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்த கொள்ளத் தவறியது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் துரோகம் இழைத்தது. இது போன்ற காரணத்தால் மீண்டும் தமாகா உருவானது. தேர்தலுக்குப் பிறகு தமாகா வளர்ச்சி பெறும்.
பெட்ரோல், காஸ் விலை உயர்வால் உங்களது பிரச்சார வியூகம் எப்படி அமையும் ?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்களின் எதிர்ப்பு நியாயமானது. விலையைக் குறைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம். இல்லையெனில் போராடவும் தயங்கமாட்டோம்.
முதல்வர் பழனிசாமி போன்ற புதியவர்களால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் ?
முதல்வரின் நிர்வாகத்திறன் அரவணைத்துச் செல்லும் பண்பு, புதிய திட்டங்களால் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கியுள்ளார்.
தொகுதி பேச்சுவார்த்தை அணுகுமுறையில் உங்களை அதிமுக எந்தளவுக்கு வரவேற்கிறது?
ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும்.
வடமாவட்டங்களில் பாமக, தேமுதிக எலியும், பூனையுமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. இவர்களை ஒரே கூட்டணிக்குள் கொண்டு வருவதில் சிக்கல் இருக்குமா?
தேர்தல் கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்தபின் இது போன்ற பிரச்சினை இருந்தால் பேசி தீர்க்கப்படும்.
அமமுக தனித்து போட்டியிடுவதால் வெற்றி பாதிக்குமா, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்புள்ளதா?
அது உட்கட்சி விவகாரம். சிறு, சிறு சலசலப்பு இருக்கலாம். வெற்றியைப் பாதிக்காது. நாங்கள் இடம் பெற்ற கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.