Published : 01 Mar 2021 07:35 PM
Last Updated : 01 Mar 2021 07:35 PM

சென்னையில் யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை

சமீபத்தில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், சென்னையில் தபால் வாக்குகள் அளிக்கத் தகுதியானவர்கள் யார்? யார்? எப்படி வாக்களிக்க விண்ணப்பிப்பது என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்-2021 வருகின்ற ஏப்ரல் 06 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பிப்ரவரி 26 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நேரில் சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு அடைந்துள்ளதாகச் சந்தேகப்படும் வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம்.

அப்படிச் செலுத்த விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியின் மூலம் படிவம் 12D-ஐ சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று பூர்த்தி செய்து மார்ச் 12 முதல் மார்ச் 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான தகுந்த அரசுச் சான்றிதழ் வழங்க வேண்டும். கோவிட் தொற்று உள்ளவர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை வழங்க வேண்டும்.

மேற்கண்ட படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மட்டுமே அந்தந்த வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்கி அதற்கான ஒப்புதலைப் பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிப்பார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் அங்கு இல்லாவிட்டால் ஐந்து தினங்களுக்குள் இருமுறை சென்று படிவங்கள் பெற்று வருவார்கள்.

சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பமில்லை எனில் நேரில் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்கு அளிக்கலாம். தேர்தல் நடத்தும் அதிகாரி சம்பந்தப்பட்ட அனைத்து படிவங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று சரிபார்த்து பூர்த்தி செய்த 12D படிவங்களை மட்டும் கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட நபர்களுக்கு தபால் ஓட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்.

மேற்கண்ட நபர்களுக்கு தபால் ஓட்டு வழங்கும் பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களுக்கு எதிரே PB எனக் குறிப்பிடப்படும். இதன் பிறகு யார் யாருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டதோ அவர்களின் பட்டியல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்”.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x