Published : 01 Mar 2021 07:23 PM
Last Updated : 01 Mar 2021 07:23 PM

முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள்; மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம்

சென்னை

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக மட்டத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதனால், திமுக தரப்பில் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில், நேற்று (பிப். 28) திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதென பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் இன்று (மார்ச் 1) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினருடனும் இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக, அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் கலந்துகொண்டனர்.

பின்னர், இருவரும் தனித்தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் உட்பட 6 பேர் அடங்கிய குழு, திமுக தலைவரைச் சந்தித்தோம். 2 நாள் பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக கூட்டணியில் முதலாவதாக முஸ்லிம் லீக் கட்சிதான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வழக்கம். அதே வழக்கத்தின்படி இம்முறையும் முதலாவதாக கையெழுத்திட்டுள்ளோம்.

காதர் மொய்தீன்: கோப்புப்படம்

5 தொகுதிகள் தர இயலவில்லை, நாட்டில் பல்வேறு சூழ்நிலைகள் நிலவுகிறது என திமுக தலைவர் தெரிவித்தார். திமுக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் நிலைமையும், அதிகமான கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிலைமையும் உள்ளது. எனவே, எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் போட்டியிடுகிறோம். கேரளாவில் எங்களுக்குத் தனிச்சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இங்கும் அதில்தான் நிற்க முடியும். தொகுதிகள் முடிவு செய்யவில்லை.

கருணாநிதி முத்தமிழறிஞர். அவரின் நினைவு வந்தது. எனவே, 3 தொகுதிகள் போதும் என உடன்படிக்கையில் கையெழுத்திட்டோம். என்னென்ன தொகுதி என்பது குறித்து நாங்கள் பட்டியல் தர வேண்டும். எங்களுக்கு விருப்பப்பட்டியலில் 25 தொகுதிகள் உள்ளன. எங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பார்கள்" என்றார்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பேசுகையில், "தமிழகத்தின் திசையை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாக இது இருக்கும். பாஜக பல்வேறு மாநிலங்களில் நடத்திவரும் மலிவான அரசியல் இந்த தேர்தலில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரும். அப்போதுதான் மாநில சுயாட்சியை உரக்க நிலைநாட்டக்கூடிய மாநிலமாக தமிழகத்தை அமைக்க முடியும். அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவ வேண்டும்.

ஜவாஹிருல்லா: கோப்புப்படம்

திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் நலனை கருத்தில்கொண்டு தியாக மனப்பான்மையுடன் இயங்கக்கூடிய மமக, திமுக தலைவருடன் தொகுதி உடன்பாடு செய்திருக்கிறோம். 2 தொகுதிகளில் மமக போட்டியிடும். சின்னம் குறித்து அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யப்படும். என்னென்ன தொகுதிகள் என்பதை பேச்சுவார்த்தை நடத்தி திமுக தலைவர் அறிவிப்பார்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x