

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழையும் இதர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த 9-ம் தேதி புதுச்சேரியில் கரையைக் கடந்தது. இது தொடர்ந்து, நிலப்பகுதியில் பயணித்து வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மறைந்து விட்டது.
இதன் காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களி்ன் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகபட்சமாக 8 செமீ, சேலம்- ஏற்காட்டில் 6 செமீ, நீலகிரியில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில், கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்தமாதம் 28-ம் தேதி தொடங்கியது. இப்பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு சராசரியாக 44 செமீ மழை கிடைக்கும். நேற்று வரை 30 செமீ மழை கிடைத்துள்ளது. விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெறவில்லை. சென்னை- 47, கடலூர் -50, காஞ்சிபுரம்- 50, தர்மபுரி- 31, நெல்லை- 45, திருவள்ளூர்- 46 செமீ மழையை பெற்றுள்ளன.