மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேர்வு மையங்களை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

மருத்துவ மேற்படிப்புகளுக்கான புதிய தேர்வு மையங்களைத் தமிழகத்தில் மேலும் அமைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்வியில், அனைத்திந்திய அளவில், தமிழ்நாடு முதல் இடம் வகிக்கின்றது. தற்போது, 50க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. எனவே, இயல்பாகவே, மருத்துவ மேற்படிப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில்தான் ஆகக் கூடுதலாக இருக்கின்றது.

இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள், பிப்ரவரி 23ஆம் நாள் பிற்பகல் 3 மணி முதல் பெறப்படும் என அறிவிப்பு வெளியாகியது. விண்ணப்பிக்கின்ற நேரம் தொடங்கியவுடன் மாணவர்கள் பதிவு செய்தனர். அதற்கு, ஓடிபி எண் கிடைப்பதற்கு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அந்த எண் கிடைத்த பிறகுதான், மாணவர்கள், தேர்வு மையத்தைத் தேர்வு செய்ய முடியுயும். அப்படி ஓடிபி எண் கிடைத்தவுடன் பார்த்தபோது, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஆகிய மாநிலங்களில், தேர்வு எழுதும் மையங்கள் நிரம்பிவிட்டதாகக் காண்பித்தது.

கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு, 3 நாள்கள் கழித்தும் கூட, தமிழ்நாட்டின் தேர்வு மையங்களைத் தேர்வு செய்கின்ற வாய்ப்புகள் கிடைத்தன. எனவே, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், இந்த ஆண்டு தேர்வு மையங்கள் எதுவுமே இல்லை; அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகின்றது. அது எத்தனை இடங்கள், எத்தனை பேர் எழுதுகின்றார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

எனவே, தமிழக மாணவர்கள், ஆந்திரா, கர்நாடகா அல்லது வட மாநிலங்களுக்குச் சென்றுதான் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனே இந்தப் பிரச்சினையில் தலையிட்டு விளக்கம் அளிப்பதுடன், தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் உயர்ந்து இருப்பதால், தமிழகத்தில் மேலும் புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in