

எடப்பாடி பழனிசாமியைப் போல் ஒரு முதல்வரைப் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார் ‘தேர்தல் மன்னன்’ கே.பத்மராஜன்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் கூட்டுறவு சங்கத் தேர்தல் வரை எந்தத் தேர்தலாக இருந்தாலும் தேர்தல் களத்தில் முதலில் குதிப்பவர் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜன்.
கே.ஆர்.நாரயணன் முதல் ராம்நாத் கோவிந்த் வரை 5 குடியரசுத் தலைவர்கள், ஷெகாவத் முதல் வெங்கய்யா நாயுடு வரை 5 குடியரசுத் துணைத் தலைவர்கள், நரசிம்மராவ் முதல் நரேந்திர மோடி வரை 4 பிரதமர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஆந்திராவில் ராஜசேகரரெட்டி, கேரளாவில் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, கருணாகரன், கர்நாடகாவில் பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, எச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, புதுச்சேரியில் நாராயணசாமி ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.
1988 முதல் இதுவரை போட்டியிட்ட எல்லாத் தேர்தலிலும் தோல்வியை மட்டுமே சுவைக்கும் பத்மராஜன், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்.
இந்தத் தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதியிலும், தனது சொந்த தொகுதியான மேட்டூரிலும், கேரளாவில் பினராயி விஜயன் போட்டியிடும் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’- யிடம் பத்மராஜன் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் 31 முறையும், மாநிலங்களவை தேர்தலில் 40 முறையும், சட்டப்பேரவைத் தேர்தலில் 65 முறையும் போட்டியிட்டுள்ளேன். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. ஊராட்சி வார்டு தேர்தலில் கூட வெற்றிப்பெறவில்லை. தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிப்பெறக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
மேட்டூரில் என் உயிருக்கு உயிரான நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் அதிகம் வாழும் வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். வேட்புமனு தாக்கல் செய்யும் முன், எனக்கு தான் ஓட்டுப்போடுவதாக தெரிந்தவர்கள் அனைவரும் சத்தியம் செய்தனர். ஆனால் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
தேர்தலில் போட்டியிட என்னை உற்சாகப்படுத்துவார்கள். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு போன் செய்தால் எடுக்கமாட்டார்கள். இருப்பினும் மன உளைச்சல் ஆகாமல் தேர்தலில் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் போட்டியிட்டு வருகிறேன்.
நான் எந்தத் தேர்தலிலும் வெற்றிப்பெற மாட்டேன். எல்லாத் தேர்தலிலும் கண்டிப்பாக தோற்பேன். வெற்றியைக் கொஞ்ச நேரம் மட்டுமே சுவைக்க முடியும். தோல்வியை சந்திக்க மன தைரியம் வேண்டும். இதனால் எனக்கு தோற்பதில் விருப்பம் என்றார் பத்மராஜன்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தல் எப்படி இருக்கும்? யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? எனக் கேட்டதற்கு..‘தமிழக தேர்தல் களம் கணிக்க முடியாத நிலையில் தான் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் உள்ளது. பணத்தால் வெல்லலாம் என நினைக்கின்றனர். அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’ என்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களே. அந்தத் தொகுதியில் பழனிச்சாமி வெற்றி பெறுவாரா? என்ற கேள்விக்கு, ‘எடப்பாடி பழனி்சாமி மனித நோயமானவர். நல்ல களப்பணியாளர். அவரைப் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது. எடப்பாடி தொகுதியில் அவர் கண்டிப்பாக வெற்றிப்பெறுவார் என்றார் பத்மராஜன்.