

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் டிஜிபி மீதான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அதை சிபிஐக்கு மாற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.
சிறப்பு டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) என்கிற காவல் துறையின் உயரிய அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறிப் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால் சர்ச்சை எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை இன்னொரு எஸ்.பி.-ஐ விட்டு மிரட்டியதாகத் தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர். கனிமொழி முதலில் இந்த விவகாரத்தைக் கண்டித்தார். ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள்ளும் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. இதையடுத்து கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட டிஜிபி கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். அவர் மீதான விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக நடக்க வேண்டும் என ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 341- (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 354 A (2)-பாலியல் துன்புறுத்தல், 506 (1)- கொலை மிரட்டல், 4 (எச்) of TN (prohibition of harassment of women act) பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் டிஜிபி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட டிஜிபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கைது செய்யவேண்டும், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“இந்த வழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை நாங்கள் விரும்புவதால் டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வெட்கக்கேடானது”.
எனக் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.