பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதிலடி

பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை: ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதிலடி
Updated on
1 min read

பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை. ஸ்டாலின் கூறிய ரவுடிகளின் பட்டியலில் பலர் திமுகவைச் சேர்ந்தவர்களே உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தற்போது தொடர்கிறது.

ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும். இதில் எந்த ஒரு இழுபறியும் இல்லை. எத்தனை இடங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பது குறித்து எதுவும் கூற முடியாது. சட்டப்பேரவையில் எங்களுடைய உறுப்பினர்கள் இரட்டை இலக்கத்தில் இருப்பார்கள்.

அமமுக- அதிமுக இணைப்பு குறித்து நாங்கள் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. அதைக் குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. அந்த இரு கட்சிகளும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

70 ஆண்டுகளாகக் காங்கிரஸும் திமுகவும் செய்யாததைப் பாஜக செய்துள்ளது. இரண்டே ஆண்டுகளில் பெண்களுக்கு இலவச காஸ் இணைப்புகளை வழங்கியுள்ளோம். நாடு முழுவதும் 8 கோடி ஏழைத் தாய்மார்களுக்கு இந்த இணைப்பு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர், ஓபிசி உள்ளிட்ட பிரிவினர் இதனால் பயனடைந்துள்ளனர். கிராமப் புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம்.

கரோனா காலத்தில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அரசு கவனத்தில் கொள்ளும். இதன் விலை குறையும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். விலை ஏற்றம் நிரந்தரமானது அல்ல. இதன் தாக்கம் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்காது".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜகவில் புதிதாக இணைந்துள்ளவர்களில் ரவுடிகள் என்று பலரை ஸ்டாலின் பட்டியலிட்டது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர்களில் பல பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ரவுடிகள் யாருமே பாஜகவில் கிடையாது" என்று எல்.முருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in