

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்குக் காவித்துண்டு அணிவித்ததைக் கண்டித்த கே.எஸ்.அழகிரி, பெரியார் கொள்கைகள் பீடுநடை போடும் பூமியாக தமிழகம் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத பாசிச, பிற்போக்கு எண்ணம் கொண்ட வகுப்புவாத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் அமைந்துள்ள, பெரியார் சிலைக்கு மதவெறி சக்திகள் காவித் துண்டு போர்த்தி இழிவுபடுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தன் வாழ்நாள் முழுவதும் எந்த வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினாரோ, அதே சக்திகள் இன்றைக்குக் காவித் துண்டைப் போர்த்தி களங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
பெரியார் எந்தக் கொள்கைகளுக்காக வாழ்ந்தாரோ, அந்தக் கொள்கைகள் பீடுநடை போடும் பூமியாக தமிழகம் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத பாசிச, பிற்போக்கு எண்ணம் கொண்ட வகுப்புவாத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.