

கருத்துக் கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளும் சுமுகமான முறையில் பேசி தொகுதிப் பங்கீட்டை ஏற்றுக்கொள்வோம். எங்களுடைய இலக்கு வெற்றிதான். அதை நோக்கியே எங்களுடைய பயணம் இருக்கும்.
கருத்துக் கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம். தமிழகத்தின் மக்கள் கணிப்பு என்பது அதிமுக அரசின் வெற்றியை உறுதி செய்து கொள்வதாக அமையும்.
சென்னையில் தமாகா சார்பில் நாளை (மார்ச் 2-ம் தேதி ) தொழிலாளர்கள் கூட்டம், 3-ம் தேதி இளைஞரணிக் கூட்டம், 5-ம் தேதி மாணவரணிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று வாசன் தெரிவித்தார்.