

பெண் அதிகாரிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வெளியான புகாரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள டிஜிபி எதிராகத் தாமாக முன்வந்து வழக்கைக் கையிலெடுத்தது உயர் நீதிமன்றம். இன்று மதியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்தார். உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார். அதன்பேரில் இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று வழக்குகள் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை இன்று மதியம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.