

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள பச்சை மலை குறித்த ஆவணம் தங்களிடம் இல்லை என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலுக்கு வருவாய்த் துறையினர் பதில் அனுப்பியுள்ளனர்.
தாம்பரம் சானடோரியத்தில் பச்சை மலை உள்ளது. இந்தப் பச்சை மலையில் தற்போது ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும், மலையை ஒட்டி மண் சுரண்டி திருடப்படுகிறது. இதுகுறித்து, எந்தத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த மலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்துப் பலருக்கும் சந்தேகம் உள்ளது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சந்தானம் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பச்சை மலை குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். அதில், அவருக்கு அளிக்கப்பட்ட பதில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மலை தொடர்பான எந்த விவரமும் தங்களிடம் இல்லை எனக் குறிப்பிட்டு பதில் அனுப்பப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர் நிலம் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் வைத்திருக்க வேண்டும். ஆனால், பச்சை மலை குறித்த தகவல் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வி.சந்தானம் கூறுகையில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சானடோரியம் அருகேயுள்ள பச்சை மலை சம்பந்தமான சில விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியைக் கேட்டேன். ஆனால், தகவல் தன்னிடம் இல்லை என்று கூறி தாம்பரம் வட்டாட்சியரிடம் கேட்கச் சொன்னார்கள். ஆனால், தகவல் தன்னிடம் இல்லை என வட்டாட்சியர் தரப்பில் இருந்து பதில் வந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.பி. மருத்துவமனை பக்கத்திலுள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஒரு மலை சம்பந்தமான தகவல்கள், ஒரு மாவட்ட ஆட்சியரிடமும், தாம்பரம் வட்டாட்சியரிடம் இல்லாதது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. இது எத்தகைய நிர்வாகம்? ஒரு மலையைப் பற்றிய தகவலே இல்லையென்றால், மற்ற நிலங்கள், நீர்நிலைகளின் கதியென்ன? என்பதில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளோம். அதேபோல் வனத்துறையிடமும் தகவல் கேட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்