

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார். அவருக்கு அப்போது தந்தை கருணாநிதி பெரியாரின் அய்யாவையும், அண்ணாவின் துரையையும் சேர்த்து அய்யாதுரை எனப் பெயரிட்டார். அவர் பிறந்த ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் மறைந்த ஆண்டு என்பதால் அவரது நினைவாக ஸ்டாலின் எனப் பெயரிட்டார்.
அய்யாதுரை ஸ்டாலின் என்று அழைக்கப்பட்டார். திமுகவில் தந்தையின் மாபெரும் ஆளுமை, பேச்சாற்றல் போன்றவற்றை வைத்து ஸ்டாலினைக் கணக்கிடும் போக்கு அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவர் அவரது வழியில் தனித்துவமான தலைவராக வளர்ந்தார். தந்தையின் கீழ் வளர்ந்ததால் அவருக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமோ, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்போ அவரது சமகாலத்து அரசியலில் ஈடுபட்டவர்கள் போல் உடனடியாகக் கிடைக்கவில்லை.
ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ஸ்டாலின் அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் தனது நிலையை வெளிப்படுத்தினார். கருணாநிதியின் மறைவுக்குப் பின் அனைத்துத் தொண்டர்களும் ஸ்டாலின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தது அதற்கு சாட்சி. கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராகக் கட்சியை வழிநடத்தி கூட்டணிக் கட்சிகளுடன் தந்தையைப் போலவே அரவணைத்துச் செல்வதால் தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி வலுவாக உள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலில் வென்றது. தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அதே கூட்டணி தொடர்கிறது.
தற்போது வரும் கருத்துக் கணிப்புகள், அரசியல் நிலவரம் திமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ளது. நிதானமான பக்குவப்பட்ட தலைவராக ஒரு நல்ல ஆட்சியை அவர் அளிப்பார் என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஸ்டாலின் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளை ஒட்டி இன்று காலை தந்தை வசித்த கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த ஸ்டாலின் தாயாரிடம் ஆசி பெற்றார். பின்னர் தந்தையின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் அண்ணா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதே வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அளிக்கும் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் மதிமுக, விசிகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.