Published : 01 Mar 2021 10:41 AM
Last Updated : 01 Mar 2021 10:41 AM

சசிகலாவுக்கு பயந்து அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி: ஸ்டாலின் விமர்சனம்

சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்துபோய் அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று (பிப்.28) மாலை, சென்னை, கொட்டிவாக்கம் - ஓஎம்.ஆர். சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற, சென்னை மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அவர் பேசியதாவது:

"ஊரும் உள்ளமும் தூய்மையானால், உன் பேரும் பெருமையும் வாய்மையுறும் என்று கருணாநிதி எழுதினார். எழுதியபடி வாழ்ந்தார்கள். அப்படித்தான் எங்களையும் வாழும்படி கற்பித்தார்.

சென்னை மாநகரத்தின் மேயராக நான் ஒரு முறையல்ல, இரண்டு முறை இருந்தவன். அமைச்சர் பொறுப்பும் துணை முதல்வர் பொறுப்பும் அதன்பிறகு வந்தவை, முதலில் கிடைத்த பொறுப்பு சென்னை மாநகர மேயர்தான்.

சென்னை மாநகராட்சியின் மேயராக 44-வது வயதில் நான் வந்தேன். ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பிற்காலத்தில் என்னைப் பாராட்டினார் தலைவர் கருணாநிதி. அப்படி உழைக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது சென்னையின் மழை தான். முதன்முதலாக நான் மேயரானபோது தொடர்ந்து சென்னையில் அடைமழை பெய்தது. முறையான வடிகால் வசதிகள் இல்லாத நிலையில் தண்ணீரில் மிதந்தது தலைநகர். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு தினமும் சென்றுவிடுவேன். உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்களை அதிகாரிகள் மூலமாக முடுக்கிவிட்டேன். பின்னர், தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வடிகால்களை அமைத்தோம்.

நான் மேயராகப் பதவி ஏற்பதற்கு முன்புவரை சுமார் 663 கிலோ மீட்டர் நீளத்துக்கு வடிகால்வாய்கள் இருந்தன. எனது காலத்தில் சுமார் 135 கிலோ மீட்டர் நீளத்துக்குப் புதிதாக வடிகால்களை அமைத்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒன்பது பாலங்களைக் கட்டியது எனது சாதனை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக பாலத்தைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, அதற்கு குறிப்பிட்டு, ஒதுக்கப்பட்ட தொகைக்கும் குறைவாக கட்டிக் கொடுத்துக் காட்டியவன் நான்.

மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தினோம். சேர்க்கை விகிதம், வெற்றி விகிதம் அனைத்தும் உயர்ந்தது. மாநகராட்சி பள்ளிகள் கணினி வசதி கொண்டதாக மாறின. சென்னை சிங்காரச் சென்னையாக மாறுவதற்கான அடித்தளப் பணிகள் அனைத்தையும் செய்து கொடுத்தோம்.

புதிய சாலைகளை அமைத்தோம். சாலைகளை விரிவாக்கினோம். நடைபாதைகளை அமைத்தோம். பேருந்து நிழற்குடைகள் அமைத்தோம். வாகனம் நிறுத்தும் இடங்கள் உருவாக்கினோம். மின் தூக்கி நடைபாலங்கள் அமைத்தோம். வழிகாட்டி பலகைகளை வைத்தோம். சத்துணவுக் கூடங்கள் கட்டினோம். பெருங்குடியில் திடக்கழிவு மேலாண்மையை உருவாக்கினோம். மழைநீர் கால்வாய்களை உருவாக்கிக் கொடுத்தோம். பூங்காக்கள் அமைத்தோம். மாநகராட்சி கணினி மயம் ஆனது. 24 மணி நேரத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் தருவதை உறுதிப்படுத்தினோம். மாநகராட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

மாநகராட்சியை நோக்கி மக்கள் வரும் நிலையை மாற்றி மக்களை நோக்கி மாநகராட்சி சென்றது. அதுதான் திமுக காலத்தில் சென்னையின் நிலைமையாக இருந்தது. சென்னையை வலம் வாருங்கள். நீங்கள் பார்க்கும் அனைத்தும் திமுகவால் உருவாக்கப்பட்டவைதான்!

* அண்ணா சாலை அண்ணா மேம்பாலம்

* கத்திப்பாரா மேம்பாலம்

* கோயம்பேடு மேம்பாலம்

* நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

* செம்மொழிப் பூங்கா

* டைடல் பார்க்

* தலைமைச் செயலகமாகக் கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை

* மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்

* மெட்ரோ ரயில்

* கோயம்பேடு காய்கறி அங்காடி

* கோயம்பேடு பேருந்து நிலையம்

* நாமக்கல் கவிஞர் மாளிகை

* பாடி மேம்பாலம்

* மீனம்பாக்கம் மேம்பாலம்

* மூலக்கடை மேம்பாலம்

* மேற்கு அண்ணாநகர் மேம்பாலம்

* வியாசர்பாடி மேம்பாலம்

* தொல்காப்பியப் பூங்கா

* மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

* தென்சென்னை முழுக்க ரூ.1400 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டங்கள்

* அண்ணா நூற்றாண்டு நூலகம்

* ஓ.எம்.ஆர் சாலையை ஐ.டி. காரிடாராக மாற்றியதும் திமுகதான்.

- இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னையின் தேவையைத் தீர்த்து வைத்தவர்கள் நாம்!

சென்னை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய வசதியாகத் திட்டமிடப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். மெட்ரோ ரயில் திட்டத்தை முதல்வர் கருணாநிதி 2006-ம் ஆண்டில் திட்டமிட்டார். ஜப்பான் சென்று அதற்கான நிதியைப் பெற்று வந்தவன் நான். இன்றைக்கு மெட்ரோ ரயிலில் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதியும் நானும் திமுகவும்தான் காரணம் என்பதை சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.

சென்னை மாநகரின் மேயராக நானும் என்னை அடுத்து வந்த மா.சுப்பிரமணியமும் செய்த பணிகளால்தான் இந்த அளவு சென்னை வளர்ந்தது. அதேபோல், துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் நான் இருந்தபோது சென்னைக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அதிகம்.

பெரம்பூர் பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, 'மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல எனக்குத் துணையாக இருக்கிற அமைச்சர்' என்று பாராட்டினார். 'நான் என்ன கருதுகிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு அந்த நினைப்பை நிகழ்த்திக் காட்டும் திறமை படைத்தவர் ஸ்டாலின்' என்றும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.

அதேபோல் தான், மா.சுப்பிரமணியம் சென்னை மாநகரருக்கு ஆற்றி வரும் பணிகளைப் பார்த்தும் பாராட்டினார் முதல்வர் கருணாநிதி. 'இவரா மேயர் என்று நான் முதலில் நினைத்தேன். அது தவறு என்று என்னைத் தோற்கடித்துக் காட்டி இருக்கிறார் மா.சுப்பிரமணியம்' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

என்னையோ, மா.சுப்பிரமணியத்தையோ முதல்வர் கருணாநிதி பாராட்டினார் என்றால், அது தனிப்பட்ட எங்களுக்கு மட்டும் கிடைத்த பாராட்டு அல்ல. சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபட்டதால் கிடைத்த பாராட்டு அது! ஆனால், இன்று சென்னையைக் குப்பை நகராக மாற்றிவிட்டார்கள். சிங்காரச் சென்னையைச் சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார்கள்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 வார்டுகளிலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் குப்பைகள்தான் காட்சி தருகின்றன. குப்பை மேடுகளில் மக்கள் நடந்து போகிறார்கள். குப்பைத் தொட்டிகள் இல்லை. இருந்தாலும் அவை நிரம்பி வழிகிறது. எடுப்பது இல்லை. நிரம்பி வழிந்து சாலைகள் குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டன. எப்போது டெங்கு வருமோ, வைரஸ் பரவுமோ என்ற அச்சம் எல்லா வார்டுகளிலும் இருக்கிறது.

சில மண்டலங்களுக்கு மட்டும் குப்பை அள்ளும் பணியைத் தனியாருக்கு விட்டுள்ளார்கள். அந்தப் பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டதை போல காட்டி விதிமுறைகளைத் திருத்தி இருக்கிறார்கள். குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இது. நான் கண்டித்த பிறகுதான் அதை ரத்து செய்தார்கள்.

கரோனா காலத்துக் கொள்ளைகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்தது என்ற அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியது. நோய்க் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நோய்க் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. போலி பில்களைப் போட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டார்கள். முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடித்துள்ளார்கள். மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்தோம் என்று சொல்லி பல கோடி சுருட்டினர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு முன்னால் தகரம் அடித்தார்கள் தெரியுமல்லவா? அந்த தகரத்தில் துட்டு அடித்தது சென்னை மாநகராட்சி. ஒரு வீட்டுக்கு முன்னால் ஐந்து தகரம் அடிக்கிறார்கள். ஒரு தகரத்துக்கு வாடகை 8,500 ரூபாய் என்று போட்டுள்ளார்கள். ஆட்டோவில் மைக் வைத்து சொல்வதில் ஊழல். சிறு வியாபாரிகளுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்ததாகச் சொல்லி, கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படி கரோனா காலத்து அறுவடைகளே சென்னை மாநகராட்சியில் அதிகமாக நடந்தன. இந்த மோசடிகளுக்கு, பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்துபோய் அதிமுக தலைமைக் கழகத்தைப் பூட்டியவர் முதல்வர் பழனிசாமி.

ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதா பிறந்த அன்று கூட அதனை பழனிசாமியால் திறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பயம் பீடித்துக் கிடக்கும் பழனிசாமி விரைவில் வீழ்வார். மக்கள் அதைச் செய்வார்கள்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x