Published : 01 Mar 2021 09:17 AM
Last Updated : 01 Mar 2021 09:17 AM

தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை; சாதாரண பெண்களின் நிலை என்ன?- கனிமொழி எம்.பி

தமிழகத்தில் ஒரு பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே பாதுகாப்பில்லை என்றால் மற்ற பெண்களின் நிலை என்னவென்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று, திமுக மகிளரணி சார்பில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், மற்றும் எஸ்.பி கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய கனிமொழி, "குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலைமையை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் 12 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.எந்த் நாட்டை பெண் என்று வழிபடுகிறார்களோ அந்த நாட்டில் பெண்களுக்கு இதுதான் நிலைமை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் நிகழ்த்துவோர் தண்டனை பெறுவது 15% தான். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாப்பதில்தான் பழனிசாமி அரசு தீவிரமாக இருக்கிறதே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அவர்கள் அதிமுகவினர். பொள்ளாச்சி விவகாரத்தில் போராடப் போன எங்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.

ஒரு பெண் கோயிலருகே நடந்துசென்று கொண்டிருக்கிறாள். கோயிலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலாத்காரம் செய்கிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை. ஒரு பெண்ணின் பெயரால் ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு நடக்கும் அதிமுக ஆட்சியின் லட்சணம் இது.

சாதாரண பெண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண் போலீஸ் அதிகாரிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அதுவும் முதல்வரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்யச் சென்ற சிறப்பு அதிகாரி,சட்டம் ஒழுங்கு சிறப்பு அதிகாரி ராஜேஷ்தாஸ். இவர் மீது இதற்கு முன்பும் குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கிறது, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அதே அதிகாரிக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருக்கிறது இந்த ஆட்சி. அந்த அதிகாரி அங்கே செல்லும்போது ஒரு பெண் அதிகாரியை அழைத்து தன் வண்டிக்குள்ளே ஏற்றிக் கொண்டு, அந்த அதிகாரியிடம் அத்துமீறி மிகக் கேவலமாக நடந்துகொள்கிறார்.

அந்த மேலதிகாரியிடம் இருந்து தப்பித்து அந்த பெண் அதிகாரி வண்டியில் இருந்து வெளியேறி இவரைப் பற்றி புகார் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அப்படிப்பட்ட சூழலிலேயே அந்த அதிகாரி தனக்கு கீழே பணியாற்றக் கூடிய ஒருவரை அழைத்து, அந்த பெண் அதிகாரியை மிரட்டக் கூடிய விதத்திலே பேசுகிறார். ‘நீங்க கம்ப்ளைண்ட் கொடுத்தீங்கன்னா தப்பா போகும். மிகப்பெரிய அதிகாரத்திலே இருக்கக் கூடியவர். ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கக் கூடியவர் என்ற ரீதியிலே அந்த பெண் அதிகாரி மிரட்டப்படுகிறார்.

பின்னர் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்ததாலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரக் கூடிய வழியிலே அந்த பெண் அதிகாரி சென்னைக்கு வந்து டிஜிபியை சந்தித்து புகார் அளிக்க வரக் கூடிய வழியிலே ஏதோ ஒரு குற்றவாளியைப் போல அந்த அதிகாரியை... அவரது ரேங்க்கிலேயே இருக்கக் கூடிய கண்ணன் என்ற இன்னொரு அதிகாரி 50 போலீஸாரோடு போய் தடுத்து நிறுத்தி, ‘நீங்க என்னை மீறிப் போக முடியாது. நீங்க அந்த மேலதிகாரியிடம் பேச வேண்டும். ராஜேஷ் தாஸிடம் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். இதை பிரச்சினை ஆக்கக் கூடாது’ என்று மிரட்டக்கூடிய ஒரு சூழல்.

அதையெல்லாம் தாண்டி அந்த அதிகாரி சென்னைக்கு வந்து புகார் கொடுக்கிறார். இத்தனை அழுத்தங்களுக்குப் பிறகுதான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க முனைகிறார்கள். காவல்துறை என்பது முதல்வரின் நேரடி பார்வையில் இருக்கும் துறை. அவரது நேரடிப் பார்வையில் இருக்கும் துறை என்பதால்தான் தூத்துக்குடியிலே 13 பேர் போராடினார்கள் என்பதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எந்தக்காரணமும் இல்லாமல் இரண்டு வியாபாரிகள் காவல்துறையால் அடித்துக்கொல்லப்பட்டார்கள்.

அதே காவல்துறை ஒரு அதிகாரியை மிரட்டுகிறது. அதை முதலமைச்சர் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கை, பெண் அமைப்புகளின் அழுத்தங்கள் இதற்குப் பிறகு அவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்படுகிறார். அதற்குப் பிறகு ஒரு கமிஷன் போடப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த பெண் அதிகாரியை வழியிலே தடுத்து நிறுத்தி, ஐம்பது போலீஸ் காரர்களோடு சென்று தடுத்து நிறுத்தி புகார் கொடுக்கக் கூடாது என்று சொன்ன கண்ணன் என்ற அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இப்படி இரு அதிகாரிகளும் இன்னும் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கைது செய்யப்படவில்லை. அவரது பாலியல் குற்றம் எவ்வளவு பெரிய தவறோ அதேபோல, புகார் அளிக்கச் சென்ற பெண் அதிகாரி மீது ஏவிய மிரட்டலும் அதே வகையிலான குற்றம்தான். ஆக இரண்டு பேருமே இதுவரை சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. ஒரு கமிஷன் போட்டிருக்கிறீர்கள். விசாரணை நடத்துகிறீர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருமே காவல்துறை அதிகாரத்தில் இருக்க கூடிய சூழலில் எப்படி அந்த விசாரணை நியாயமாக நடக்கும்? உங்களால் சாட்சிகளை மிரட்ட முடியாதா? ஒரு எஸ்பியையே கூப்பிட்டு மிரட்டக் கூடிய அதிகாரிகள், மற்றவர்களை சாட்சிகளை மிரட்ட மாட்டார்களா? இதுவரை அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

இதுதான் பெண்கள்மீது இந்த அரசு வைத்திருக்கும் மரியாதையா? பெண்களுக்கு இந்த அரசு தரும் பாதுகாப்பு இதுதானா? ஒரு எஸ்பி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால்... இந்த ஆட்சியில் கான்ஸ்டபிள்ஸ் ஆக வேலை செய்யக் கூடிய பெண்களின் நிலை என்ன? இந்த ஆட்சியிலே மற்ற துறைகளில் பணியாற்றும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்களின் பிரச்சினைகள், புகார்கள் கண்டுகொள்ளப்படுகிறதா இல்லையா? இதற்கே திமுக ஆட்சியிலே தனியாக ஒரு விசாரணை கமிஷன் போடப்பட வேண்டும்.

ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே பாதுகாப்பில்லை. அவர் மிரட்டப்படுகிறார் , அவர் மீது பாலியல் வன்முறை நடக்கிறது என்ற சூழலில்...யாருக்குமே பயப்படவில்லை என்ற சூழல் இருக்கும்போது... அரசு நியாயமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கைது செய்யவில்லை, சஸ்பெண்ட் செய்யவில்லை என்ற நிலையில் அவரது கீழே பணியாற்றும் மற்ற ஊழியர்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்னால் இன்னொரு பெண் அதிகாரி, இன்னொரு போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்தார்கள்.என்ன நடவடிக்கை எடுத்தது இந்த ஆட்சி? ஒன்றுமே செய்யவில்லை. நிர்பயா குற்றம் நடந்த பிறகு அந்த வழக்குக்குப் பிறகு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, பெண் பாதுகாப்புக்காக நிதி உருவாக்கப்பட்டது. பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டுமென்று நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பழனிசாமி ஆட்சியிலே எத்தனை நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் திமுக ஆட்சியிலே மாவட்டம்தோறும் பெண்களுக்கான தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆட்சியிலே இருப்பவர்கள் குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த ஆர்பாட்டத்தோடு நாங்கள் நிற்கமாட்டோம். தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்.

முதல்வர் தனக்குக் கீழே பணியாற்றுகிறவர்களை குற்றவாளிகளாகத்தான் தேர்ந்தெடுக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒத்து வரும். அவரே மிகப்பெரிய குற்றவாளி இல்லையா? ஆனால் இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றால், இந்த ஆர்பாட்டங்கள் தொடரும். உங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x