

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து வீடு, வீடாக பிரச்சாரம் செய்வோம் என்று சிவசேனா தமிழக தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
இந்துக்களின் மனதை நோகடித்த செயலுக்காக திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக வீடு, வீடாக பிரச்சாரம் செய்வோம்.
இத்தேர்தலில் ஆன்மிகம், தெய்வீகம், இந்துத்துவா கொள்கை கொண்ட ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தமிழகத்தில் இந்து ஆதரவாளர்களுடன் அமைக்கும் கூட்டணிகுறித்து ஓரிரு நாளில் அறிவிப்போம். திமுக கூட்டணி வேண்டாம் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம்.
சசிகலாவை சந்தித்த டிராபிக் ராமசாமிக்கும் சிவசேனா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பட்டா இடத்தில் வைக்கப்பட்ட பால்தாக்கரே சிலை அகற்றப்பட்டுள்ளது. சிலையை நிறுவியவரிடமே அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதற்காக பால்தாக்கரே படத்துடன் நீதி கேட்டு மாநிலம் முழுவதும் காவிக்கொடி போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.