யானைகள் நலவாழ்வு முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை திரும்ப கேட்கும் அசாம் அரசு

யானைகள் நலவாழ்வு முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை திரும்ப கேட்கும் அசாம் அரசு

Published on

அறநிலையத் துறை சார்பில் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்றுள்ள, வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை, பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் குச்சியால் தாக்கும்போது, வலியால் யானை கதறுவதுபோன்ற வீடியோ காட்சி கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, பாகன் வினில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பாகன், உதவியாளர் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அதிகாரப்பூர்வத் தகவலின்படி, ஜோய்மாலா என்கிற ஜெயமால்யதா பெண் யானையின் உரிமையாளருக்கான சான்று, அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த கிரின் மோரன் என்பவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யானையை வைத்திருப்பதற்கான சான்று காலவதியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அசாமில் இருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட ஜெயமால்யதா யானையை திரும்ப அனுப்புமாறு, அசாம் மாநில வனத் துறை அதிகாரிகள், தமிழக வனத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்ப உள்ளதாக அசாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in