Last Updated : 01 Mar, 2021 03:17 AM

 

Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

காவலாளிகள் இல்லாததால் தொடரும் கொள்ளை சம்பவங்கள் ஏடிஎம் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா மட்டும் போதுமா? - வங்கிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில் கே.கள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த வடமாநில கும்பல்,லாக்கர்களை அறுத்தும், உடைத்தும் ரூ.19 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

அங்கு இரவு நேர காவலாளிகள் நியமிக்கப்படாத நிலையில் கண்காணிப்பு கேமரா பதிவுகள்,தொழில்நுட்ப எச்சரிக்கை செயல்பாடுகள், எச்சரிக்கை அபாய ஒலிப்பு மணிக்கான இணைப்புகளையும் துண்டித்து கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதனால், வங்கிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இரவுநேர காவலாளிகள் பணியில் இல்லாதது, கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய சூழலிலும்கூட திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள், ஏடிஎம் மையங்களில் இரவு நேர காவலாளிகள் பணிகளில் அமர்த்தப்படாத நிலையே உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் ஏடிஎம் இயந்திரம் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும், கடந்த2 ஆண்டுகளாக அங்கு இரவு நேரகாவலாளிகள் பணியில் இல்லை என்பதும், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பை மட்டுமே நம்பி செயல்பட்டு வந்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா என்பது வெறும் இயந்திரம் மட்டுமே. அவற்றின் ஒயர்இணைப்புகளை துண்டித்தால் அனைத்தும் முடிந்துவிடும். எனவே,அவை எப்படி முழுமையான பாதுகாப்பு அம்சமாக இருக்கும்என்ற கேள்வியும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

சிக்கனம் வேண்டாம்...

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "கண்காணிப்புகேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வருகையால், பெரும்பாலான வங்கிகள் ஒப்பந்த அடிப்படையில் வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்களில் காவலாளிகளை நியமிப்பதை நிறுத்திவிட்டன. கண்காணிப்பு கேமரா இருக்கும் தைரியத்தில் மாதந்தோறும் காவலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதை விரும்பாத வங்கிகள், சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துவிட்டன. அதேசமயம், சில தனியார் வங்கிகள் இன்னமும் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகளை பணியில் அமர்த்தி வருகின்றன.

கண்காணிப்பு கேமராக்களை நம்பி காவலாளிகளை நியமிக்காமல் இருப்பது, வளர்ந்த நகரப்பகுதிகளுக்கு சரியாக இருக்கும். புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இது உகந்ததாக இருக்காது. கிராமப்புறங்களில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலுள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்வோருக்கு காவலாளிகளை தவிர்த்து என்ன பாதுகாப்பு உள்ளது. காவலாளிகளின் பணி கண்காணிப்பு மற்றும் உதவி என்று வரையறுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உதவியாகவும் அவர்கள் இருப்பார்கள்.

பொதுமக்களின் பணத்துக்கு வங்கிகளே பொறுப்பு என்பதால், சிக்கன நடவடிக்கை என பாராமல் அனைத்து புறநகர், கிராமப்புற பகுதிகளிலுள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களுடன் காவலாளிகளை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

காவலாளிகள் கட்டாயம்

திருப்பூர் மாவட்ட முன்னோடிவங்கி மேலாளர் அலெக்ஸாண்டரிடம் கேட்டபோது, "வங்கிகள், ஏடிஎம் மையங்களில போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை, காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குற்றம் நடைபெறும் இடங்கள் என கணக்கில் கொள்ளப்பட்ட இடங்களில், வங்கிகள் சார்பிலும் காவலாளிகள் நியமிக்கப்படுகின்றனர். குற்றம் நடைபெற வாய்ப்பில்லாத பகுதிகள் என கருதும் ஏடிஎம் மையங்கள், வங்கிகளில் காவலாளிகள் நியமிப்பதை வங்கி நிர்வாகங்கள் செய்வதில்லை. அடுத்து வரும்வங்கியாளர்களுக்கான கூட்டத்தில்,இதுபோன்ற பகுதிகளில் பாதுகாப்புக்கு காவலாளிகளை கட்டாயம்நியமிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x