திருடியதை திருப்பி வைத்தபோது போலீஸில் சிக்கிய திருப்பம்

திருடியதை திருப்பி வைத்தபோது போலீஸில் சிக்கிய திருப்பம்
Updated on
1 min read

திருடிய சூட்கேஸில் துணிகளும் சான்றிதழ்களும் மட்டுமே இருந்ததால், அதைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தவர், போலீஸிடம் பிடிபட்டார்.

சென்னை ரயில் நிலையங்களில் ஏராளமான திருட்டில் ஈடுபட்ட 52 வயதான ஒருவர், கடந்த சனிக்கிழமை செயின்ட் தாமஸ் மவுண்டில் திருடிய சூட்கேசைத் திருப்பிக் கொடுக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், உத்தரகாஞ்சியைச் சேர்ந்த பாஸ்கரன் (26) என்பவரின் சூட்கேஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அக்டோபர் 20-ம் தேதியன்று களவு போனது.

போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் பாஸ்கரன், இது குறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை, ஊரப்பாக்கம் அருகில் உள்ள அய்யஞ்சேரியைச் சேர்ந்த 52 வயதான மலர்கண்ணன் என்பவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தது.

இதையடுத்து, பாஸ்கரனுக்கு ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் தற்செயலாக ஒரு சூட்கேஸைக் கண்டெடுத்ததாகவும், அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.

சனிக்கிழமை காலை, கிண்டி ரயில்வே நிலையத்தில் பாஸ்கரனும், செல்பேசியில் பேசியவரும் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட இடத்துக்கு வந்த பாஸ்கரன், அங்கே வந்திருந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சூட்கேஸ் திருடு போகும்போது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நபர்தான் அங்கே வந்திருக்கிறார் என்பது பாஸ்கரனுக்குப் புரிந்தது. காவல்துறை சம்பவம் நடந்த அக்டோபர் 20-ம் தேதியன்றே சிசிடிவி காட்சிகளை அவரிடம் அளித்திருந்தது.

பாஸ்கரனுடன் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி உண்மையறிந்து, அலாரத்தை ஒலிக்க விட்டார். அதனைக் கண்டு பயந்துபோன மலர்கண்ணன் அங்கே இருந்த தாம்பரம் செல்லும் ரயிலில் தாவிச்சென்று ஏறினார். உடனே ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் நிலவரத்தைத் தெரிவித்தார்.

துரத்தல் வேட்டை

போலீசாரிடம் இருந்து தப்பிக்க எண்ணிய மலர்கண்ணன், ரயில் நிலையத்தின் தவறான பாதையில் இறங்கி நடந்தார். இதனால் அங்கே காத்திருந்த அதிகாரிகள், மலர்கண்ணனைத் தேட வேண்டியிருந்தது. விரைந்து பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், மலர்கண்ணனைக் கைது செய்தனர்.

கைதான மலர்கண்ணன் தீவிர விசாரணைக்குப் பிறகு, திருடிய சூட்கேஸில் பணமோ, நகையோ இல்லாததால் அதனைத் திருப்பிக் கொடுக்க வந்ததாகவும், இதுவரை 50-க்கும் மேற்பட்ட சூட்கேசுகளைத் திருடி இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து மலர்கண்ணன், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in