

பெண் கொலை வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர். வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
சென்னை, அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவர் தனது மகள் மோனிகாவுடன் (24) வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஜெயந்தி மற்றும் மோனிகா வீட்டில் தனியாக இருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் கத்தியுடன் வீட்டில் நுழைந்து ஜெயந்தியின் தலை மற்றும் முதுகிலும், மோனிகாவின் கையிலும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ஜெயந்தி உயிரிழந்தார். அவரது மகள் மோனிகா சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
முதல் கட்டமாக அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர். இதில் கொலை தொடர்பாக புளியந்தோப்பைச் சேர்ந்த அந்தோணி குமார், ஓட்டேரியைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
30 குற்ற வழக்குகள்
இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட அந்தோணிகுமார் பெரியமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உட்பட 30 குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே 2 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலாஜி மீது செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளன’’ என்றனர்.
இந்நிலையில் பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான் றிதழ்கள் வழங்கினார்.