

தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 36 பறக்கும் படைகள் நியமிக் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த பிப்ரவரி 26 -ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இம்மாவட்டத்தில் ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி கள் உள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும்.
பறக்கும் படையில் ஒரு வட்டாட்சியர் அல்லது ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர், தலை மைக் காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவரும் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் இருப்பர். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 குழுக்கள் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் 24 மணி நேரம் செயல்படத்தக்க வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், மது பானங்கள் மற்றும் இதர பரிசுப் பொருட்கள் வழங்குதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற புகார்கள் வந்தால் நேரில் செல்வார்கள். புகாரின் மீது உண்மைத்தன்மை இருப்பின்அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும்.