

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சிப் படிப்பில் கேரளத்தைக் காட்டிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என அதன் இயக்குநர் வி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை கொடிசியா மண்டல அறிவியல் மையத்தில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் அறிவியல் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கோவையைச் சேர்ந்த 10 கல்லூரிகளில் இருந்து இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியியல் ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 195 பேர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் வி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தியாவில் திருவனந்தபுரம் உட்பட 6 இடங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. இதன்மூலமாக உலக அளவிலான பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் 30 சதவீதம் பேர் கேரள மாநில மாணவர்கள் ஆவர்.
கேரள மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழக மாணவர்களின் பங்களிப்பு ஒற்றை இலகத்தில்தான் உள்ளது.
அந்த அளவுக்கு அந்த கழகத்தின் முக்கியத்தும், எப்படி செல்வது ஆகியவை குறித்து இங்கு விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணம். இளங்கலை பொறியியல் படிப்பு முடித்தவர்கள் முதுகலை பொறியியல்தான் படிக்க வேண்டும் என்பது வேண்டியதில்லை. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்து அடிப்படை அறிவியல் தொடர்பான ஆராய்ச்சியில் கூட ஈடுபடலாம். அவ்வாறு, அறிவியல் ஆய்வில் ஆர்வம் கொண்ட நிறைய மாணவர்கள் இந்த துறைக்கு வரும்போதுதான் உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்க முடியும். போட்டியும் போட முடியும். மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்.
கருத்தரங்கில், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயல்பாடு, நோக்கம், அது மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகள், உலக அளவில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்து துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
மண்டல அறிவியல் மையத்தின் திட்ட இயக்குநர் டி.எம். அழகிரி சுவாமிராஜூ, சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குநர் செளந்தரராஜ பெருமாள், அறிவியல் அலுவலர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.