Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

மகளிர் சுய உதவிக் குழு நிதியில் முறைகேடு; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்; 5 அலுவலர்கள் பணிநீக்கம்: ரூ.16.12 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி நிதியில் முறைகேடு செய்ததாக உதவி திட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த டிச.17-ம் தேதி முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி மற்றும் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.

சில நாட்களுக்கு பின்னர் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப் பாளர் ரஞ்சிதம், வட்டார இயக்க மேலாளர்கள் அஞ்சுகம், ரமேஷ், நதியா, இளமதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ராஜ்மோகனிடம் அளித்த புகாரின்பேரில், அவர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், உதவி திட்ட அலுவலர் மோகன்ரவி உத்தரவின்பேரில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ரமேஷ், அஞ்சுகம், நதியா, இளமதி ஆகியோர் மகளிர் திட்ட நிதியில் ரூ.16.12 லட்சம் முறைகேடு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட உதவி திட்ட அலுவலர் மோகன் ரவியை பணியிடை நீக்கம் செய்து மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதிநிர்மலா உத்தரவிட்டார்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ரமேஷ், அஞ்சுகம், நதியா, இளமதி ஆகிய 5 பேரை பணிநீக்கம் செய்து திட்ட இயக்குநர் ராஜ்மோகன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x