

புழல் ஏரி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் காவாங்கரை பகுதியிலிருந்து கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய நீராதாரமான புழல் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாலும் பாதுகாப்பு கருதி நொடிக்கு 1500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இந்த நீர் செல்லும் கால்வாயின் கரையோரத்தில் உள்ள தண்டல்கழனி, கிருஷ்ணா நகர், மகாராஜா நகர், பாபா நகர், மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புழல் பேரூராட்சி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டது. தற்போது மாநகராட்சியுடன் இணைந்த பகுதிக்கும் கிராண்ட்லைன் ஊராட்சிக்கும் இடையே சாலையில் குறுக்கே புழல் ஏரி நீர் வெளியேறும் கால்வாய் செல்கிறது. ஏரி நீர் திறக்கும்போதெல்லாம் மக்கள் தண்ணீரை கடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. கிராண்ட்லைன், வடகரை பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நகர்களைச் சேர்ந்த மக்கள் மாநகராட்சி பகுதிக்கு வருவதற்கு இந்த சாலையைத்தான் நம்பியுள்ளனர். இல்லையேல் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செங்குன்றம் வழியாகவே செல்ல முடியும்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, “இந்த இடத்தில் ஒரு தரைப்பாலத்தை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பாலம் கட்ட கடந்த மாதம்தான் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எப்போது பாலம் கட்டப்படும் என தெரியவில்லை. வடகரையில் 3 அரசுப் பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் காவாங்கரையிலிருந்து நடந்தும், சைக்கிள்கள் மூலமும் செல்கின்றனர். தண்ணீர் வெளியேற்றப்படுவது நிற்கும் வரை அவர்கள் மேலும் 2 கி.மீ. சுற்றிக்கொண்டு பள்ளிகளுக்கு செல்லும் நிலை உருவாகும். மக்கள் கடைகளுக்கு செல்வதற்குக் கூட நீண்ட தூரம் சென்று வர வேண்டியுள்ளது.” இவ்வாறு அவர்கள் கூறினர்.