வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்? - கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு

பத்தாப்பேட்டை பகுதியில் தென்னந்தோப்பில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய வனத்துறையினர்.
பத்தாப்பேட்டை பகுதியில் தென்னந்தோப்பில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய வனத்துறையினர்.
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க விவசாய நிலங்களில் கண் காணிப்பு கேமராவை பொருத்தி வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், சிறுத்தை வந்து சென்றதற்கான எந்த தடயமும் அங்கு இல்லாததால் வனத்துறையினர் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி வட்டம், சென்னாம்பேட்டை அடுத்த பத்தாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாந்தராஜ் (44) என்பவர் நேற்று காலை 9 மணியளவில் தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.

அங்கு வாழை தோப்பில் தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது வரப்பு மீது சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை கண்ட சாந்தராஜ் கூச்சலிட்டபடி ஊருக்கு திரும்பினார். வாழை தோப்பில் சிறுத்தை இருப்பதாக பொதுமக்களிடம் அவர் கூறினார்.

உடனே, பத்தாப்பேட்டையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விவசாயி சாந்தராஜ் நிலத்துக்கு சென்றனர். அங்கு சிறுத்தை இல்லை. இருந்தாலும், வாழை தோப்பில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகியிருந்ததால் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வந்திருப்பதை கிராமமக்கள் உறுதி செய்தனர்.

உடனே, திருப்பத்தூர் வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் வனச்சரகர் பிரபுதலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பத்தாப்பேட்டை கிராமத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சாந்தராஜ் வாழை தோப்பில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

அதில், வாழை தோப்பில் பதிவாகியிருந்த விலங்கின் கால் தடம் சிறுத்தையின் தடமா ? என ஆய்வு செய்தனர். அதன்பிறகு, பத்தாப்பேட்டை பகுதியை யொட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பத்தாப்பேட்டை கிராமத்தில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் ஜாப்ராபாத், பத்தாப்பேட்டை, சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் வன விலங்குகளை கண்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறி வுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in