

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குறிப்பிடும்படியான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறாததால் திருச்சி மாநகரம் களையிழந்து காணப்படுகிறது.
மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அனைத்து அரசியல் கட்சிகளும் திருச்சியை மையப்படுத்தியே மாநில மாநாடுகள், பிரமாண்ட அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவது வழக்கம்.
மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பதும், இங்கிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் வகையிலான தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்திருப்பதும், அவற்றின் மூலம் சில மணி நேரங்களில் வாகனங்கள் மூலம் இங்கு வந்துசெல்ல முடியும் என்பதுமே அரசியல் கட்சிகள் திருச்சியை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
இதுதவிர கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் வந்து செல்வதற்கேற்ப சர்வதேச விமானநிலையம், நட்சத்திர தங்கும் விடுதிகள், பிரமாண்ட மாநாடுகளை நடத்தும் வகையிலான பஞ்சப்பூர், மன்னார்புரம், பொன்மலை ஜி கார்னர், உழவர்சந்தை, பிராட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடவசதி அமைந்துள்ளதாலும் திருச்சியைத் தேர்வு செய்து கூட்டங்களை நடத்து வழக்கம்.
2016 சட்டப்பேரவைத் தேர்தல்
கடந்த 2016-ம் ஆண்டிலும் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே நாம் தமிழர் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு, பாமக சார்பில் ராமதாஸ், அன்புமணி கலந்துகொண்ட மண்டல மாநாடு, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில மாநாடு, மக்கள் நலக்கூட்டணியின் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மதிமுக மாநில பொதுக்குழு கூட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மகளிர் மாநாடு, மாநில நிர்வாகிகள் கூட்டம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம், இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில கூட்டம், ஐக்கிய ஜனதாதள மாநில உயர்மட்டக்குழு கூட்டம், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் குடும்பவிழா, அதிமுகவின் பிரமாண்ட பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு அமைப்புகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சங்கங்கள் போன்றவை சார்பில் திருச்சியில் மாநாடுகள் நடத்தப்பட்டு, அரசியல் கட்சிகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால் திருச்சி மாநகரம் நாள்தோறும் அரசியல் ரீதியிலான பரபரப்புகளை தக்க வைத்திருந்தது.
மதுரை, கோவை 'பிஸி'
ஆனால் இந்த முறை சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவித்துள்ள நிலையில் கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் திருச்சியில் குறிப்பிடும்படியான எவ்வித மாநாடோ, பொதுக்கூட்டங்களோ நடத்தப்படவில்லை. கட்சிகளின் தேசிய, மாநில தலைவர்களின் வருகைகள், அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளும் பெரியளவில் இல்லை. எனவே அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் திருச்சி மாநகரம் தற்போது களையிழந்து காணப்படுகிறது.
அரசியல்வாதிகள் வருகை குறைந்தது
கட்சிகளின் மாநில, மண்டல மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறாததால் வெளியூரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் திருச்சி வருவதும் குறைந்துவிட்டது. எனவே இங்குள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து வாகன நிறுவனங்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சார்பு வர்த்தகர்களுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக வருவாய் கிடைக்காததால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். அதேசமயம் சாலைகளில் கட் அவுட் வைப்பது, அலங்கார வளைவுகள் ஏற்படுத்துவது, கொடி கட்டுவது, தலைவர்களின் வந்து செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்தை நிறுத்துவது, மாநாட்டுக்கு வரக்கூடிய வெளியூர் வாகனங்களால் சாலைகளில் நெரிசல் ஏற்படுவது, மதுப்பிரியர்களால் தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதது போன்றவற்றால் திருச்சி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.