

‘‘என் கடைசி மூச்சி இருக்கும்வரை பாஜகவை எதிர்ப்பேன். என்னை மிரட்ட முடியாது’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் ப.சிதம்பரம் பேசியதாவது:
கட்சித் தலைவர்கள் முகம் பார்த்து வாக்களித்த காலமெல்லாம் இப்போது இல்லை. முகம் தெரிந்தவர்கள் தினமும் வீடு, வீடாகச் சென்று கேட்டால் தான் வாக்களிப்பார்கள். காங்கிரஸை தோழமை கட்சிகள் மதிக்க வேண்டுமென்றால், கூட்டங்களில் அவர்களுக்கு சரிசமான எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக் கொடி பறக்க வேண்டும்.
அடுத்த அரசு நாங்கள் தான் என்று பழனிசாமி பீற்றிக்கொள்வது ஒரு போதும் நடக்காது. அமைச்சரவையைக் கூட கூட்டாமல் 110 விதியில் நகைக் கடனை ரத்து செய்தது விதிமீறல். பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் கடன்களை ரத்து செய்துள்ளது கோமாளித்தனம்.
தமிழக அரசு வெற்றிநடை போடும் அரசல்ல. வெற்று நடைபோடும் அரசு. கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன். என்னை மிரட்ட முடியாது. திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை காங்கிரஸுக்கு கேட்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக அரசு வெற்றுப் பேச்சு அரசு. அதற்குப் பிண்ணனியில் குரல் கொடுப்பது மோடியும், அமித்ஷாவும் தான். பாஜக நச்சு இயக்கத்தை தமிழகத்தில் நுழைய தமிழகமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பெரும் கொள்ளை. ஆனால் கார்ப்ரேட்டு நிறுவனகளுக்கு .பல லட்சம் கோடிக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி அளித்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகாவது மாணவர்களுக்குத் தேர்வு வைத்திருக்கலாம். மாணவர்களின் திறமையை பரிசோதிக்க தேர்வு அவசியம். அதனால் தேர்வை நடத்திவிட்டு அனைவருக்கும் தேர்ச்சி கொடுத்திருக்கலாம்.
தேர்தலுக்காக வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனால் ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் உள்ஒதுக்கீடு விவாதத்திற்கு உட்பட்டது. அதற்காக தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பணியை முடிக்காதநிலையில் உள்ஒதுக்கீட்டை அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி வலிமையான கூட்டணி. மூன்றாவது அணி அமைந்தால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும். இதை 3-வது அணி அமைக்க நினைப்பவர்கள் உணர வேண்டும். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 407 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் 298 தொகுதிகளில் எதற்காக 8 கட்ட தேர்தல் நடத்துகின்றனர். இதுகுறித்து கேட்டால் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான ஆட்சி அமைந்தால் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என ஹெச். ராஜா பேசியது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
இதனை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். பாஜகவைப் பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கும் கட்சி. அதேபோல் இந்த தேர்தலில் தேர்தெடுக்கப்படும் திமுகவை பாஜக கலைக்க நினைத்தால் மக்கள் கொந்தளிப்பார்கள். இது கோவா, மணிப்பூர் அல்ல; தமிழகம்,.
இவ்வாறு அவர் பேசினார்.