இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு வரவேற்பு அளித்த ஆட்சியர் அரவிந்த்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு வரவேற்பு அளித்த ஆட்சியர் அரவிந்த்.
Updated on
1 min read

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் கேட்டு 50 நாடுகள் காத்திருக்கின்றன என தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பங்கேற்க வந்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி (பொ) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழாவில் கட்சிப் பணியில் இருந்தபோதும், தற்போது ஆட்சிப் பணியில் இருக்கும்போதும் தவறாது கலந்துகொள்கிறேன். எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்று நினைத்த நான், தற்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் பணியைப் பெற்றுள்ளேன். தெலங்கானாவில் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, தமிழில் பதவிப் பிரமாணம் எடுக்க ஆசைப்பட்டேன். இப்போது புதுச்சேரியில் அது நிறைவேறியுள்ளது. அங்கு தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது பெருமையாக உள்ளது.

கரோனா தொற்று இன்னும் குறையாத நிலையிலே உள்ளது. மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். உலகம் கரோனா பிடியில் தவித்தபோது, அதிலிருந்து இந்தியா மீண்டு வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள கோயில்களில் வில்வ இலை, துளசி இலை போன்றவற்றால் பூஜை செய்யப்பட்டு பிரசாதமாக வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இதனால் நாம் கரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

வெளிநாடுகளின் கரோனா தடுப்பூசியை நம்பியிருந்த நிலையில், இந்தியாவிலேயே தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளோம். இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. இந்திய கரானோ தடுப்பூசிகளை கேட்டு 50க்கும் மேற்பட்ட நாடுகள் காத்திருக்கின்றன''.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in