Published : 28 Feb 2021 05:06 PM
Last Updated : 28 Feb 2021 05:06 PM

கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் உள்ள 14 கிராமங்களில் பத்திரப் பதிவுக்குத் தடை; அரசாணையைத் திரும்பப் பெறுக: வைகோ

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசரக் கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலருக்கு அனுப்பி உள்ளார்.

அந்த அரசாணையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின்போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் இணைந்து, கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள, உலகப் புராதனச் சின்னமாக ஐநா மன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும், புகழ் வாய்ந்த, பல்லவர்களின் மாமல்லபுரம், டச்சுக்காரர்களின் பழமையான துறைமுகமாக திகழ்ந்த சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம், ஆகிய 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மக்கள் ஆட்சிக்கு எதிரான சர்வாதிகாரம் ஆகும். உயிர்களைப் பலிகொடுத்து விட்டு, கல்லறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் அணு உலைகள் தேவையில்லை. அதை இழுத்து மூட வேண்டும். இந்த அரசாணையின் காரணமாக, கதிர்வீச்சைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்களை நிலம் அற்றவர்களாக மாற்றி, உள்நாட்டு அகதிகளாக வெளியேற்ற மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் மக்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஆக அணு உலைகள் பேராபத்து என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே மக்கள் சக்தியும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடித் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மதிமுக துணை நிற்கும்.

உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம் என்று கட்சிகளும், மக்களும் நடைபெற உள்ள 2021 தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கவனம் திரும்பி இருக்கும் நிலையில் சந்தடி சாக்கில் இந்த அரசாணையை வெளியிட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற்று, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இல்லை என்றால் அணுக்கதிர் வீச்சைப் போன்ற பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x