

உலகின் உன்னதமான மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச இயலவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
காரைக்கால் சந்தைத் திடலில், பாஜக சார்பில் ''மலரட்டும் தாமரை ஒளிரட்டும் புதுச்சேரி'' என்ற முழக்கத்தை முன்வைத்து பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார்.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது:
''பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். புனித பூமியாக காரைக்காலில் இவ்வளவு கூட்டமாக வந்துள்ள மக்களை வணங்கி மகிழ்கிறேன். 17-ம் நூற்றாண்டிலேயே பெண்களின் மேன்மைக்காகக் குரல் கொடுத்தவர் காரைக்கால் அம்மையார். அவரையும் சனீஸ்வர பகவானையும் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
எனக்குக் கிடைத்த தகவல்களின்படியும், என் அரசியல் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய ஆட்சி அமையும்.
பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாற்றப்படும். காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்துவிட்டது. அதிலிருந்து ஒவ்வொருவராக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். மொழிபெயர்க்கும்போது தன் தலைவரிடமே பொய் சொன்னவர் மற்றவர்களிடமும் பொய் பேசியதால் பிரிந்து வருகிறார்கள். உலகில் நல்ல பொய் சொல்பவருக்கு விருது கொடுக்க வேண்டுமானால் நாராயணசாமிக்குதான் வழங்க வேண்டும். அவரின் எண்ணம், நோக்கம், செயல் அனைத்தும் புதுச்சேரி மக்கள் முன்னேற வேண்டும் என்பதல்ல. டெல்லியில் உள்ள காந்தி குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என நினைத்தார்.
காங்கிரஸில் உள்ள தலைவர்கள் பாரதிய ஜனதாவுக்கு வரக் காரணம், அங்கு குடும்ப ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதிலுமே காங்கிரஸ் சிதைந்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி அமைப்பதாக் கூறி ஆட்சியை பிடித்தார். பின்னர் டெல்லியில் காந்தி குடும்பத்தின் காலைப் பிடித்து நராயணசாமி முதல்வரானார். தகுதிக்கும், திறமைக்குக்கும் வாய்ப்பளிப்பதில்லை. இது புதுச்சேரி மக்களுக்கு செய்த துரோகம் இல்லையா?
ஊழலை வளர்க்கும் ஒரே வேலையை மட்டுமே அவர் செய்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இந்த நிதியின் வளர்ச்சித், திட்டங்கள் வந்து சேர்ந்துள்ளதா? எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கான நிதியைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் 75 சதவீதத்தினர் வேலையின்றி உள்ளனர். பாஜக ஆட்சி அமைந்தால் அது 40 சதவீதமாக குறைக்கப்படும்.
புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையப் போகிறது. நாராயணசாமியால் அதனைத் தடுக்க முடியாது. புதுச்சேரியில் அண்மையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் மீனவர்கள் நலனுக்காகப் பல கோடி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தனை திட்டங்களின் பலன்களும் அதிகமாக புதுச்சேரியை வந்தடைய நான் பொறுப்பெற்றுக் கொள்கிறேன்.
உலகின் உன்னதமான மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச இயவில்லை என்பது வருத்தமாக உள்ளது''.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
கூட்டத்தின்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், கே.வெங்கடேசன், அருள்முருகன், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அவரது மகன் ரமேஷ், ஜான்குமார் மகன் விவிலியன் ரிச்சர்ட் உள்ளிட்டோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம், பாஜக மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.