

புதுச்சேரியில் அடுத்து நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமித் ஷா தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சாரத்துக்காகவும் ஒருநாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இன்று காலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்ற அமித் ஷா, காரைக்காலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பாஜகவின் விழுப்புரம் மாவட்டப் பிரிவின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அமித் ஷா பேச உள்ளார்.
காரைக்காலில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
''என்னுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்.
புதுச்சேரி மண் மிகவும் புனிதமானது. மகாகவி பாரதியார் நீண்டகாலமாக இங்குதான் இருந்தார். அரவிந்தர் இங்குதான் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கி, எதிர்கால வாழ்க்கையையும் தொடங்கினார்.
பிரதமராக மோடி வந்தபின், நாடு முழுவதற்கும் புதுச்சேரியை மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் என விரும்பினார். இந்த மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்காக 115 திட்டங்களைச் செயல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், எங்களால்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
பெண் ஒருவர் பேசிய வார்த்தையை, தனது தலைவர் முன்பே பொய்யாக மொழிபெயர்த்துக் கூறிய ஒருவரைத்தான் நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வராக அமரவைத்தீர்கள்.
மக்களுக்குச் சேவை செய்யாமல் சோனியா குடும்பத்துக்குச் சேவை செய்யும் முதல்வராகவே இருந்தார். மத்திய அரசு வழங்கிய ரூ.1500 கோடி நிதியில் காந்தி குடும்பத்துக்குப் பங்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான பெரிய தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சிதைந்து வருகிறது. புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிதைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல் முறைதான்.
மீன்வளத்துறைக்குத் தனியாக அமைச்சகம் வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தி கேட்கும் முன்பே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி, மீன்வளத்துறைக்குத் தனித்துறையை உருவாக்கிவிட்டார்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.