

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் அட்டவவணை:
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் - மார்ச் 12
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் - மார்ச் 19
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20
மனுக்கள் திரும்பப்பெறுதல் - மார்ச் 22
இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 22
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை நாள்- மே 2
தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், வாகன சோதனை, தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பு எனத் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.